samedi 11 mai 2013

நெற்றிப்பொட்டு




நெற்றிப்பொட்டு!

நெஞ்சை மயக்கும்
மந்திர மையோ?

காதல் கடலின்
சுழலோ?

என்னுயிரைப்
பொட்டென்று சுடுவதால்
பொட்டோ?

இறைவனுக்கு
நெற்றிக்கண்!
என்னவளுக்கு
பொட்டும் கண்!

வட்டப் பொட்டழகு
என்னை
வட்டமிடச் செய்யும்!

வண்ண மலரின்
மகரந்தம்
வட்டப் பொட்டு!
எண்ணத்தின் சுடராக
நீட்டுப் பொட்டு!

சிவப்புப் பொட்டுச்
செம்மையைக் காட்டும்!

பச்சைப்பொட்டுப்
பசுமையைக் கூட்டும்!

நீலப் பொட்டு
நினைவினை வாட்டும்!

மஞ்சள் பொட்டு
மகிழ்ச்சியை ஊட்டும்!

கோடிக் கற்பனையைக்
கொட்டும் பொட்டே! - உன்னைக்
கூடி மகிழ்ந்து
கொஞ்சுவது எந்நாளோ?

11.05.2013

jeudi 23 août 2012

இடை



பெண்ணே!
உடலின்
இடையில் இருப்பதால்
இடையோ?
என்னை
இரண்டாகப் பிளப்பதால்
இடையோ?

காதல் கருவறையைத்
தாங்கும் பீடம்!
அதனால்
இடையோ உன்னை
இருக்கும் என்றும்
இல்லை என்றும்
எண்ணுகிறேன்!

பின்னல் சடை
தவழும்
மின்னல் இடை!
அப்பப்பா...
பின்னால் தாக்குவது
மரபன்று!

காதல் கொடி
படருவதால்
கொடியிடையோ?

தோன்றி மறைவதால்
மின்னிடையோ?

தங்க மேனியைத்
தாங்குவதால்
தளிர் இடையோ?

புல்வெளிப் பூக்கள்
பொறாமை கொள்ளும்
பொன்னிடையோ?

புணர்ச்சி பெருக்கில்
பொலிவதால்
பூவிடையோ?

என்னைத் துடிக்கச்
செய்வதால்
துடியிடையோ?

சிறுநொடியும்
என்னை விடாமல்
பற்றிக் கொள்வதால்
சிற்றிடையோ?

இன்பச் சோலையை
ஏந்தி இருப்பதால்
அது
இடையன்று!
அதுவே முதல்!

mercredi 22 août 2012

பார்வை






                        பாவை - பெண்
                        பாவை - கவிதையை
                        பாவை - இனிப்பை
                          
                        பாவை
                        இடை ஒளிர்ந்தால்
                        பார்வை!

                        ஒவ்வொரு முறையும்
                           அவள் பார்வையில்
                           மூச்சடைத்துப் போகிறேன்!

                           அந்த முதல் பார்வை
                           என்னுயிரோடு
                           ஒட்டிக்கொண்டது!

                        பிணிகளைப் போக்கும்! - கவிதை
                           அணிகளைப் பூக்கும்! - தேன்
                           கனிகளைக் காக்கும்!
                           முத்தொழில் புரியும்
                           முத்தொளிர் பார்வை!

                           காலை விடியலின்
                           சூரியனாய்
                           அவள் பார்வை!

                           கோல இரவின்
                           குளிர்  நிலவாய்
                           அவள் பார்வை!

                           பைத்தியம் தந்தது! - பின்
                           வைத்தியம் தந்தது!

                           மாய பார்வை
                           மது மழை!

                           சொக்கும் பார்வை
                           சொர்க்கத்தின் திருவிழா!

                           கொஞ்சும் பார்வை
                           கோகுலக் காட்சி!

                           பேசும் பார்வை
                           பேரின்ப வீடு!

                           காந்தப் பார்வை
                           கவிதைக் கோட்டை!

                           பொய்யாய்
                           ஏசும் பார்வை
                           இன்பப் பெருக்கு!

                           கோலப் பார்வை
                           கூட்டும் கனவு!

                           அன்புப் பார்வை
                           அமுத ஊற்று!

                           கொல்லும் பார்வை
                           கொட்டும் பனித்துகள்

                           கன்னல் பார்வை
                           கற்பனைக் களஞ்சியம்!

                           மையல் பார்வை
                           மயக்க மருந்து!

                           கண்களின் கூடலைக்
                           கம்பன் காட்டுவான்!
                           கண்ணொடு கண்இணை கவ்வி
                           ஒன்றை ஒன்று
                           உண்ணவும் நிலைபெறாது
                           உணர்வும் ஒன்றிட
                           அண்ணளும் நோக்கினான்!
                           அவளும் நோக்கினான்!

                           அவளை நானும்
                           என்னை அவளும்
                           உண்ணும் பார்வை
                           ஒவ்வொரு நாளும் வேண்டும்!

samedi 18 août 2012

வானவில்


அதோ வானவில்
என் தேவதை வருகிறாள்!

என் தேவதையை
வரவேற்க
இயற்கை போடும்
தோரண வாயில்!

என் தேவதை வாழும்
இல்லத்தின்
நுழைவாயில்!

சிவப்பு 
அவளின் தேனிதழ்!

பச்சை
அவளின் நினைவுகள்!

மஞ்சள்
அவளின் முகம்!

நீலம்
வான்போல் கடல்போல்
அவளின் கனவுகள்!

ஆரஞ்சி
அவளின் அன்புள்ளம்

ஊதா
ஆடும் இளமை!

கருநீலம்
காதலின்  வன்மை!

வானவில்லே
உன்னிடத்தில் உள்ளவை
ஏழுவண்ணங்கள்!
என் காதலியின்
கண் வண்ணங்கள்
உன் வண்ணங்களை விஞ்சும்!

நெஞ்சைக் குத்தும்
வில் வண்ணம்!

கொஞ்சி பேசும்
சொல் வண்ணம்!

என்னை வீழ்த்தும்
வெல் வண்ணம்!

போதை தரும் 
கள் வண்ணம்

இரவில் ஏங்கும்
முள் வண்ணம்!

சிட்டுப்போல்
பறக்கும்
புள் வண்ணம்!

ஒற்றைப் பார்வையால்
கொல் வண்ணம்!

வண்ணங்கள் கொஞ்சும்
வண்ண மகள்!
வானவில்லே - நீயா 
அவளுக்கு நிகா்!

jeudi 16 août 2012

மழையும் அவளும்




மழையும் அவளும்  ஒன்றுதான்!
திரளும் கருமேகம்!
புரளும் கார்க்குழல்!!
 
அது
வான்மழை!
இது
தேன்மழை
இரண்டும்
பருவத்தால் பொழிவன!
 
செம்புலப் பெயல் நீா்போல்
நானும் அவளும்!


மழையால்
மண் குளிரும்!
மங்கையால்
மனம் குளிரும்!!

மழையால்
புவிவளம் செழிக்கும்!
அவளால்
கவிவளம் தழைக்கும்!!

விண் பொழிவது
காலமழை!
கண் பொழிவது
காதல்மழை!

மேகங்களின் மோதல்
மின்னல் மழை!
கண்களின் மோதல்
கன்னல் மழை!

யுத்தமழையால்
முழுகும் பயிர்!
முத்த மழையால்
முழுகும் உயிர்!

பற்பல நடனம்
மழையும் அவளும்
ஆடுகின்றனா்!

மானின் துள்ளலை
மழையும் அவளும்
கற்றதெப்படி?

என்வாழ்வில்
ஒவ்வொரு நாளும் மழைக்காலம்!
மங்கையின் வருகை!

சின்னவளின் சிரிப்பு!
சிந்தும் மழைத்துளிகள்!

வேல்விழியின் பாய்ச்சல்
மொழியும் மழை!

மழையில் நனைந்தால்
உடல் சிலிர்க்கும்!
அவள் நினைவில் நனைந்தால்
உயிர் சிலிர்க்கும்!!

மழையிடம் உண்டு!
மங்கையிடம் உண்டு
மின்னல்!

மழைத்துாரல்
மலா்க்கை தீண்டல்!

மழைச்சாரல்
மணியுடல் தழுவல்!

மழைக்குளியல்
மங்கையின் இணைப்பு!

மண்ணில் குதித்தாடும்
மழைக்கும்
என்னுள் குதித்தாடும்
அவளுக்கும்
வாசமுண்டு!


சின்னக் குடையின்  - கீழ்
பெரிய
காதல் தேசம்!
இளமை படை எடுக்கும்!
முத்தக் கொடை நடக்கம்!

மழையின் ஈரம்
மலரிதழ் முத்தம்!

அவளின் பேரழகு
என்னை
இடிபோல் தாக்கும்!

அவள் பேரழகைச்
சுவைக்கவே
பெய்யெனப் பெய்யும் மழை!

பொழியும் மழையில்
சிறுவா்களின்
காகிதப் கப்பல்!
என் சிந்தனையில்
செவ்விதழ்க் கப்பல்!!

மழையும் அவளும்
ஒன்றுதான்

மழை இல்லையெனில்
மண் இல்லை?
அவள் இல்லையெனில்
நான் இலலை?

மழையும் அவளும்
ஒன்றுதான்!